
பரபரப்பான சென்னை திநகரில் குறுகலான சிலசாலைகளுக்கு இடையே ஶ்ரீ புவனேஸ்வரிக்கு ஒரு சிறிய திருக்கோவில் அமைந்துள்ளது ஆச்சர்யமே இல்லை. ஈரேழு புவனங்களையும் ஆளும் அந்த ஈஸ்வரியின் ஆளுமைக்கு இந்த சிறிய சந்தும் சொந்தமன்றோ ! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல இந்த சிறிய கோவிலிலும் பெரிய புவனேஸ்வரி சந்நிதி அமைந்துள்ளது அவள் கடாக்ஷம் தான்
ஆம் இந்த கோவிலில் மூர்த்தியும் பெரிது கீர்த்தியும் பெரிது என்பதற்கு சான்றாக நாள்தோறும் நடைபெறும் பூஜைகளும் அவற்றை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டமே சான்றாகும் பஞ்சாங்கத்தில் உள்ள விசேஷ தினங்கள் அனைத்தும் இங்கே கோலாகலமாக கொண்டாடப்படுவதும் அதற்கு பக்தர்தான் கூட்டம் சாலையின் மூலைவரை அலைமோத பல்பல காரணங்கள் உண்டு. இதைகட்டி நிறுவி பராமரித்து நடத்திவரும் திரு.அசோக் அவர்களின் அளவிடமுடியாத பக்தியும் ஆளுமைத்திறனும் மூலகாரணம் என்றால் மறுக்கமுடியாது. சிறுவயதிலும் இந்த இளைஞரின் மனத்திலும் புத்தியிலும் உயிரிலும் ஆவியிலும் வியாபித்து விளங்கும் பக்தியின் பலமேயாகும் என்பதே உண்மை.
பௌர்ணமியோ அமாவாசையோ வெள்ளியோ செவ்வாயோ நவராத்திரியோ தீபாவளியோ பொங்கலோ புதுவருடமோ எதுவானாலும் அம்பிகைக்கு அதிசயத்தக்க அபிஷேக அலங்கார ஆரத்திகளும் செய்யும் பாங்கு எந்த பல்கலைகழகத்திலும் கற்க முடியாதவை என்பதை மறுக்கமுடியாது.
இந்திருக்கோவிலின் அர்ச்சகரான அசோக் பக்தியின் உச்சநிலையில் பக்தர்களுக்கு பெற்ற தாய்க்கும் குழந்தைக்கும் பார்த்து பார்த்து உணவளிப்பது போல சகல நைவேத்யங்களையும் அன்புடன் தயாரித்து ஆசையுடன் அந்த சின்னஞ்சிறு சந்நிதி முழுவதும் நிறைய பரத்தி அமுது செய்யும் அழகு நெஞ்சை நெகிழும் ஒன்றாகும் . அன்னைக்கு மட்டுமின்றி அடியார்கூட்டம் அனைத்திற்கும் இவ்வமுதை பார்த்துபார்த்து அளிக்கும் பாங்கும் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு இவ்வாலயத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும் ஒன்றாகும்
ஆமாம், இந்த கோலாகலத்திற்க்கு ஆதாரமாக நிதி எப்படி வருகின்றது எனபதும் ஆச்சர்யமே ஸ்ரீ புவனேஸ்வரி என்பவள் ஸ்ரீலக்ஷ்மி சரஸ்வதி துர்க்கை எனும் சக்திகளின் மொத்த உருவம் அன்றோ! இவள்தான் லக்ஷ்மிகடாக்ஷத்தினால் எண்ணிலடங்கா பக்தர்களை ஒரு காந்தம் போல தன் பக்திவலையினில் சிக்க வைத்து பல்வேறு கைங்கர்யங்களுக்கு பொருளை கணக்கின்றி கொடுக்க வைத்து அதற்க்கு ஈடாக அருளை அடுத்த கணமே வாரி வழங்கியுள்ள பல அனுபவங்களை இங்கு வரும் அன்பர்கள் பலர் கூறக்கேட்கும்போது நெஞ்சம் நெகிழ்ந்தது .
அம்பிகையின் கருணையை சொல்வதா அல்லது பக்தியின் தீர உணர்வில் அவளை தொடர்ந்து தொழுது வரும் பக்தர்களின் நிலையை கூறுவதா ! பெற்ற பெண்ணிற்கு எப்படி பார்த்து பார்த்து உடைகளும் நகைகளும் உணவும் அளிப்போமோ அப்படியொரு பக்தி பரவசத்துடன் உலகிற்கெல்லாம் தாயான அன்னை புவனேஸ்வரிக்கு தொண்டு செய்யும் அன்பர்களின் பராமரிப்பில் சின்னஞ்சிறு சந்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில் நிச்சயம் ஒருநாள் பிரமிக்கத்தக்க ஓர் பேராலயமாக உருவெடுக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
ஒரு கோவிலை பராமரித்து கவனிக்க பரந்த மனம் படைத்த தனவந்தர்கள் மட்டும் போதுமா ? உடலால் உழைத்து உதவி செய்யும் உள்ளங்களும் வேண்டாமா ? இக்கோவிலை சுற்றி வாழும் ஏழை எளிய குடும்பத்தினர் அனைவரையும் தான் பக்திவலையில் கட்டிவைத்து உள்ளாள் இந்த தாய் புவனேஸ்வரி. தினசரி பூஜையிலும் சரி விஷேசநாட்களிலும் சரி இங்குவரும் சிறார்களும் இளைஞர்களும் பெண்களும் ஆளுக்கொரு வேலையை இழுத்துபோட்டுகொண்டு அசை ஆசையாய் தொண்டுசெய்து வருவதும் பிரமிக்கும் படியாக உள்ளது.
இத்தகைய கோவிலுக்கு தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியையே அம்பாளுக்கு அர்பணித்துள்ள திருமதி மாலா குடும்பத்தினர்க்கு ஈரேழு பிறவிகளிலும் சர்வ சௌபாக்யங்களும் நிச்சயமாக தாய் புவனேஸ்வரி அருள்வாள் என்பதில் ஐயமில்லை.
மேல்குலத்தில் பிறப்பதோ வேதங்கள் படிப்பதோ பெரும்பணம் படைத்தவராய் இருப்பதோ சமூக அந்தஸ்தில் மின்னுவதோ மட்டுமே அல்ல வாழ்க்கை, கள்ளங்கபடமற்ற பக்திநிலையே முக்திக்கு முதல்படி என்பதை உலகிற்கு பறைசாற்றும் இத்திருகோவிலின் மகிமையை கண்டு செயல் மறந்து நின்றோம். இந்த அண்ட சராசரத்தின் ஈரேழு புவனங்களையும் படைத்தது காத்து ரக்ஷித்து நிற்கும் அன்னை புவனேஸ்வரியின் அருளை மகிமையை நினைத்து கண்ணீர் மல்க அவள்தனை வணங்கி நின்றோம்.
For enquiries and contributions Contact
Mr. Ashok ( Priest ) / +91 9551429092
Giriyappa Road, T Nagar, Chennai-17
