“நாம ஸாகரத்தின்” விஷ்வரூபம்

தனுர் மாசத்தில் ஒவ்வொரு ஆண்டும், சென்னை கிருஷ்ணகான சபையில் காலை 7:30 மணி அளவில், கம்பீரமான குரலில் “ராம, ராம, ராம…” என்று ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ், தன் சிஷ்ய கோடிகளுடன் துவங்கி, சுமார் 9:30 மணி அளவில்,

“நவநீத சோராய நந்தாதி… ஜெயமங்களம்”

என்று நிறைவு செய்யும், பரம பக்திமயமான “நாம ஸாகர” அமுதத்தை பருகும் பாக்கியம் பெற்றவர்களான நாங்கள்,

“இச்சுவை தவிர யாம் போய் இந்திரலோகம் ஆளும், அச்சுவை பெரினும் வேண்டோம், அரங்க மா நகர் உள்ளானே”

என்பது சத்யவாக்கு.

ஆனால், 2020வது ஆண்டில், மஹா மாரியின் பயங்கர தாண்டவத்தின் விளைவால், இந்த மார்கழி பஜனாம்ருதத்தை பருக வாய்ப்பு இல்லையே என்று மனம் நொந்த ஆன்மீக அன்பர்களுக்கு, அம்ருத வர்ஷம் பொழிந்தது போல, ஸ்ரீவெங்கடேஷ்வரா பக்தி சானல், தனுர் மாசம் முழுவதும் காலை 8:30 முதல் 9:30 வரை, ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் குழுவினரின் நாம சாகர அம்ருதத்தை ஒளிபரப்பி, நம்மை ஆத்ம ஒளி வெள்ளத்தில் மூழ்கடித்தனர் என்பது பேரானந்தம் அளித்தது.

அல்ப செல்வம் உள்ளவர்க்கு, ‘ஜாக்பாட்’ அடித்தது போல, ஆட்டோ, கார் என்று தேடாமல், வீட்டிலிருந்தபடியே, நமக்கு நாம ஸாகர அனுபவத்தை அளித்த ஸ்ரீவெங்கடேஷ்வரா பக்தி சானல், திருமலையையே கோவிந்தபுரத்திற்கு பெயர்த்து கொடுத்தது என்பது ஆன்மீக அன்பர்கள் செய்த பெரும்பாக்யம். ப்ரம்மாண்டமான, கண்கவர் வண்ணமயமான பின்னனியில், ஸ்ரீ ருக்மிணி சமேத பாண்டுரங்க ஸமஸ்தானத்தில் இப்பேரின்பத்தை அனுபவித்தது, சக்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல நம்மை திக்குமுக்காட வைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது; இரவு 7:30 மணிக்கு பாகவத அம்ருதத்தையும் பருக வாய்ப்பளித்ததற்கு ஸ்ரீஸ்ரீ மகராஜ் அவர்களுக்கும், ஸ்ரீ வெங்கடேஷ்வரா பக்தி சானலிற்க்கும் கோடி நமஸ்காரங்கள்.

இந்த மார்கழி, ‘சாபக்கேடு போல அமைந்துவிட்டதே’ என்று நொந்த ஆன்மீக அன்பர்களுக்கு, நாம அம்ருத ஸாகரம் பருகியதின் விளைவாக கைமேல் பலன் போல vaccine உம் வந்துவிட்டது என்பது நாம் செய்த புண்ணியமே ஆகும். சென்னை வாசிகள் மட்டுமின்றி, அகில உலகத்திலுள்ள ஆன்மீக அன்பர்களுக்கும் சென்றடைந்த இந்த நிகழ்ச்சி, நாம ஸாகரத்தின் விஷ்வரூப தர்ஷனமாகும் என்றால் மிகையாகாது.

ராதே கிருஷ்ணா!

என்றும் குரு க்ருபை நாடும்
ராஜீ மணி

Author: nammamadrasnews

Leave a Reply