நுங்கம்பாக்கத்தில் வாழ்ந்த மணி என்கிற மாமணி

எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகளின் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளராக சேவை செய்த ஓய்வு பெற்ற வளர்ச்சி அதிகாரி

திரு. GVS. மணி அவர்களது மறைவையொட்டி எழுதப்பட்ட கருத்துரு

எல் ஐ சி என்னும் மாபெரும் ஆலமரத்தை வளர்த்து கட்டிக்காத்து வரும்  வளர்ச்சி அலுவலர்கள் வர்க்கத்தின் மாபெரும் தலைவர் திரு. கணேசன் வெங்கட சுப்ரமணி (19.10.1931 –20.03.2023)–GVS.Mani–GaneshanVenkata Subra Mani – இன்று நம்மிடையே இல்லை. தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹாரம் என்னும் ஊரை பூர்வீகமாகக் கொண்ட எங்கள் மண்ணின் மைந்தர் நுங்கம்பாக்கத்தில்தன் இல்லத்திலிருந்து தனது 91 ஆம் வயதில் 20.03.2023 அன்று புறப்பட்டு இறைவனடி கலந்தார்.

1956 ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் தென் மண்டலத்தில், (இன்றைய தென் மத்திய மண்டலத்தை உள்ளடக்கியது) காப்பீட்டுக் களப்பணியாளர்கள் கூட்டமைப்பை உருவாக்கிய முன்னனி தலைவர்கள் திருவாளர்கள் C.M.ராஜேந்திரா, S.ராஜகோபாலன், K.S.ராமசாமி, M.L.தண்டவதே, M.அரவிந்தாட்சன், T.S.சீதாராமராவ் போன்றவர்களை ஒன்றிணைத்த பெருமைக்குரியவர் திரு.G.V.S. மணி அவர்கள். தென் மண்டலக் கூட்டமைப்பை இரும்புக் கோட்டையாக உருவாக்கிய பெருமை இவர்களையே சாரும்.

இன்றைக்கு இருப்பது போல தொழில்நுட்ப, போக்குவரத்து, செய்தித்தொடர்பு வசதிகள் இல்லாத காலக்கட்டத்தில், தங்களுக்கு நிரந்தர காலமுறை ஊதிய விகிதம் கூட இல்லாத இந்த தியாகிகள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து NFIFWI என்னும் மாபெரும் இயக்கத்தைக் கட்டமைத்தார்கள்.

1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் நாள் அன்றைய தென் மண்டலத்தின் ஹைதராபாத் நகரில் நடந்த அகில இந்திய மாநாட்டில் திரு.T.A.பை அவர்களை உரையாற்ற வைத்து, வளர்ச்சி அலுவலர் வர்க்கத்துக்கு ஆதரவாக சில அறிவிப்புகளை அவர் வாயாலேயே வெளியிட வைத்ததில் அமரர்.GVS.மணி அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு.

பணிப் பாதுகாப்பு, ஊதிய பாதுகாப்பு, வருடாந்திர ஊதிய உயர்வு, என்னும் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 1000 வளர்ச்சி அலுவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதிலும் தென்மண்டலமே முன்னிலை வகித்தது.

அமைதியற்ற சூழலில் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய காலக் கட்டாயத்தில் தோழர். GVS மணி அவர்கள் 1986 ஆம் ஆண்டு தேசிய கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இடிமேல் இடியாக அன்று அகில இந்திய தலைவராக இருந்த S.W.கல்விட் அவர்கள் 05.08.1987 அன்று காலமானார். தனது ஒப்பற்ற தலவனை இழந்து வளர்ச்சி அலுவலர்கள் வர்க்கமே வாடிக் கிடந்த நிலையில் இந்த இயக்கத்தை சேதமில்லாமல் கட்டிக்காக்க வேண்டிய மாபெரும் பொறுப்பும் GVS மணி அவர்கள் மேல் விழுந்தது.

முதியவர்கள் பணிநீக்கம், பணி ஓய்வு, ஊதிய உயர்வின்மை, ஊதிய வெட்டு என சிறிது சிறிதாக கரைய, ஊக்கத்தொகை, கூடுதல் பயணப்படி இவற்றை சுவைத்த புதியவர்கள் வளர்ச்சி அலுவலர்களில் பெரும்பாண்மை ஆயினர். பணிப் பாதுகாப்பு, ஊதிய பாதுகாப்பு குறித்த கவலைகளே புதியவர்களுக்கு இல்லாமல் போனது. போராட்டங்களை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளில் சமரசம் செய்து கொள்ளலாம் என்கிற கருத்து ஆங்காங்கு ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.

1987 இறுதியில் பெங்களூரில் நடந்த அகில இந்திய செயற்குழு, மூன்று கோரிக்கைகளையும் வென்றெடுக்கும் வரை போராட்டத்தை தொடர வேண்டும் என முடிவெடுத்தது. ஆனால் ஒற்றை இலக்க வித்தியாசத்தில் எடுக்கப் பட்ட இந்த முடிவை பொதுச்செயலாளர் திரு.GVS மணி ஏற்கவில்லை. அகில இந்திய பொதுக்குழுவை ஜெய்ப்பூரில் கூட்டி முடிவெடுக்க முனைந்தார். ஆனால் அதே ஒற்றை இலக்க வித்தியாசத்தில் பொதுக்குழு போராட்டத்தை தொடர “பம்பாய் செல்வோம்” (Bombay Chalo) என்று அறிவித்தது.

இரண்டு மண்டலங்கள் ஆதரவு, மூன்று மண்டலங்கள் எதிர்ப்பு, என்கிற நிலையில் போராட்டத்தின் வெற்றி குறித்த கவலை GVS மணி அவர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளியது. இயக்கத்தின் ஒற்றுமையை மட்டுமே பிரதானமாக கருதிய திரு. GVS மணி அவர்கள் அன்றைய தலைவர் திரு.M.M.சதானா அவர்களுடன் கலந்து பம்பாய் செல்லும் போராட்டத்தை கைவிட்டார். சென்னையில் கூடிய செயற்குழுவில் இந்த இயக்கம் பிளவுபட்டுவிடக் கூடாது என்பதற்காக தான் எடுத்த முடிவில்  செயற்குழுவுக்கு ஒப்புதல் இல்லையென்றால் தான் பதவி விலகத் தயார் என்றும் அதற்கேற்ப தனது ராஜினாமா கடிதத்தை தலைவரிடம் அளித்து விட்டதாகவும் தெரிவித்தார். இறுதியாக, செயற்குழு, திரு.GVS மணி அவர்களே பொதுச் செயலாளராக தொடர வேண்டும் என்றும், நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனவும் தீர்மானித்தது.

பல சுற்று பேச்சு வார்த்தைக்குப் பின் நிர்வாகமும் கூட்டமைப்பும் 1988 ல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். (MOU 1988) எல்.ஐ.சி வரலாற்றில், சட்டமியற்றும் அதிகாரத்தை மைய அரசாங்கம் எடுத்துக் கொண்ட பின்னரும், ஒரு ஊழியர் சங்கத்துடன் நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொண்டது இதுவே முதலும் கடைசியுமாகும். அந்த ஒப்பந்தமே 1989 ஆம் ஆண்டின் வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு விதிகள் (Special Rules 1989) என்கிற பெயரில் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த சட்டத்தால் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருந்த வளர்ச்சி அலுவலர்கள் நிவாரணம் பெற்றனர். அவர்கள் இழந்த ஊதிய உயர்வுகள் திருப்பியளிக்க வழிவகை காணப்பட்டது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் நிர்வாகப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப் பட்டனர். இன்றுவரை அனைவராலும் போற்றப்படும் அந்த ஒப்பந்தத்தின் வரலாற்றுப் பெருமைக்குரியவர் ஐயா GVS மணி அவர்கள்.

தஞ்சை கோட்டத்தின் பொதுச் செயலாளராக நான் அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்புகள் கிடைத்தன. எனது கோட்டத்தில் ஒரு போராட்டத்தை நான் துவக்கிய போது, தானே நேரில் தஞ்சைக்கு வந்து அதனை ஒரே நாளில் முடித்து வைத்த மாமனிதர் அவர்.

அவர் வாழந்த காலத்தில் வாழ்ந்தேன், அவரால் இயக்கத்தில் வளர்ந்தேன், அவர் வழியில் இன்றும் பணியை தொடர்கிறேன் என்ற நிறைவோடு அமரர் GVS மணி அவர்களை வணங்கி, விண்ணுலகிற்கு வழியனுப்புகிறேன்.

இரா.மூர்த்தி

முன்னாள் தலைவர், தென் மண்டல கூட்டமைப்பு

Author: nammamadrasnews

Leave a Reply